சுவையான ஃபுல்கா தயார் செய்வது எப்படி

மல்டிக்ரெய்ன் / கோதுமை மாவு - ஒரு கப் நீர் - அரை கப் எண்ணெய் - அரை தேக்கரண்டி (விரும்பினால்) உப்பு - சுவைக்கேற்ப
மாவுடன் உப்பு சேர்த்து கலந்து, சிறிது சிறிதாக நீரை விட்டு மிருதுவாகப் பிசைந்து கொள்ளவும். (மாவு முழுவதும் நீர் விட்டு பிசையும் வரை விரல்களை மட்டுமே பயன்படுத்தவும். அப்போது தான் அழுத்தம் கொடுக்காமல் மாவுக்கு தேவையான நீர் சேர்ப்போம்). மாவின் நடுப்பகுதியில் அழுத்தி வெளிப்பகுதியை விரல்களால் மடித்து உள்ளே மீண்டும் அழுத்திப் பிசையவும். இப்படி பிசைவதால் மாவு ஒரே சீராகப் பிசைய வரும். உள்ளங்கையின் அடிப்பாகத்தால் மாவை நன்றாக அழுத்தி பிசையவும். (இப்படி மாவை பிசைவதால் மாவு கெட்டியில்லாமல் மிகவும் மிருதுவாக வரும்). விரும்பினால் கடைசியாக கையில் மட்டும் சிறிது எண்ணெய் விட்டு ஒட்டாமல் வரும்படி பிசையலாம். பிசைந்த மாவை அரை மணி நேரம் மூடி வைத்திருக்கவும். (குறைந்தது 15 நிமிடங்களாவது வைத்திருந்தால் நல்லது). பிறகு எடுத்து மீண்டும் ஒரு முறை பிசைந்து கொள்ளவும். இப்போது மாவை எடுத்து உருட்டினால் நன்றாக பந்து போல் உருட்ட வரும். கோடுகளோ, வெடிப்போ இருக்காது. இது தான் சரியான பதம். உருட்டிய மாவை தேவையான மாவில் பிரட்டி தேய்த்துக் கொள்ளவும். மிகவும் மெல்லியதாகத் தேய்க்க வேண்டாம். சில நேரம் அப்பளம் போல ஆகிவிடும். பிறகு மிதமான சூட்டில் தோசைக் கல்லில் போடவும். (தீ குறைவாக இருந்தால் ரொட்டி ஹார்டாக வரும். தீ அதிகமாக இருந்தால் தீய்ந்து ரொட்டி உப்பலாகி வராமல் ஓட்டை விழுந்துவிடும்). கல்லில் போட்ட சில நொடிகளில் மேலே சிறு சிறு முட்டை போல எழும்பும். அப்போது திருப்பிவிடவும். திருப்பிய பிறகு சில நொடிகள் கூடுதலாக வேகவிடவும். தோசைக் கல்லில் இருக்கும் பகுதி, மேலே இருக்கும் பகுதியை விட சற்று நன்றாகவே வெந்து இருக்கும். இப்போது இடுக்கி கொண்டு ரொட்டியை எடுத்து திருப்பி அடுப்பில் நேராக போடவும் (முதலில் கல்லில் பட்ட பகுதி இப்போது அடுப்பில் படும். அதாவது குறைவாக சிவந்த பக்கம்). தேவைப்பட்டால் தீயைக் குறைக்கவோ, கூட்டவோ செய்யலாம். சில நொடிகளில் நன்றாக உப்பி வரும். ஏதேனும் ஓரத்தில் ஓட்டை விழுந்தால் உப்பாமல் போகும், ஆவி வரும் பகுதியை இடுக்கியால் மூடிப்பிடித்தால் மீண்டும் உப்பி வந்துவிடும். இதன் உள் பகுதி பரோட்டா போல லேயர் லேயராக இருக்கும். சாப்பிட மிகவும் மிருதுவாகவும் இருக்கும். சுவையான ஃபுல்கா தயார். விருப்பமான பக்க உணவோடு பரிமாறவும். இரண்டு நாட்களானாலும் கெட்டுப்போகாது, ஹார்டாகாது.

Comments