கன்னி நாய்

பொதுவாக கன்னி நாய் பார்வைக்கு ஒரளவுக்கு கோட்டடு டாபர்மென் பின்ஸ்சர் நாயைப்போல இருக்கும், இது இயல்பான காதுகள் மற்றும் வால் கொண்டிருக்கும். இந்த நாய் பொதுவாக கருப்பு மற்றும் பழுப்பு நிறத்திலும் இருக்கும்,சிலவற்றிற்கு பாதங்களிலும், மார்பிலும் குறைந்த அளவு வெண்மை நிறம் உள்ளதாக இருக்கும். மேலும் இதில் ஒரு கிரீம் நிற நாய் வகை ஒன்றும் உள்ளது, இது "பால்கன்னி" என்ற பெயரால் அழைக்கப்படுகிறது. கன்னி நாய் நல்ல கூரான நீண்ட முகம், சிறிய தலை, நன்கு கீழிறங்கிய மார்பு, மெலிந்த-நீளமான உடல், மிகக்குறைந்த ரோமம், நீண்ட மெல்லிய வால் ஆகியவற்றுடன் அழகான உடலமைப்போடு கன்னி நாய் அமைந்திருக்கும். பொதுவாக ஆண் நாய் நின்ற நிலையில் சராசரியாக முன்தோள்வரை 25 அங்குலம் (64 செண்டி மீட்டர்) உயரமும், பெண் நாய் 22 அங்குலம் (56 செண்டி மீட்டர்) முன்தோள் உயரமுடையவையாக உள்ளன. குணம் கன்னி நாய் கூச்ச சுபாவமானது என்றாலும் தேவைப்பட்டால் அது வீட்டையும் தன் எஜமானனையும் காக்கும். இவை அமைதியானவை தொல்லை தரும்வகையில் குரைக்காதவை. கன்னி நாய்கள் மிகவும் விசுவாசமாக இருப்பவை. பயிற்சியளிக்க எளிதானவையாக இருக்கும், ஆனால் அவை எப்போதும் வேட்டையின் போது தனித்து இயங்க நினைப்பவை. இவை மிகவும் சுறுசுறுப்பானவையாகவும், மற்றும் வலுவான கால்களைக் கொண்டதாக உள்ளதால் மான்களை வேட்டையாட பயன்படுத்தப்படுகின்றன. கன்னி நாய் தமிழ்நாட்டின் திருநெல்வேலி, கோவில்பட்டி, கழுகுமலை, Kileral, கோடாங்கிப்பட்டி, சிவகாசி, மதுரை சுற்றுவட்டாரப் பகுதிகளில் காணக்கிடைக்கிறது. இந்த நாயின் பெயர் கன்னி (அதாவது கன்னி கழியாத பெண்) என்ற பெயர் வருவதற்குக் காரணம், இந்த நாய்கள் திருமணத்திற்கு முன்பு மணமகனுக்கு பரிசாக வழங்கப்பட்டது, அதாவது வரதட்சணை பொருட்களில் ஒன்றாக இந்த நாயும் தரப்பட்டது. இதனால் இந்த நாயிக்கு கன்னி என்று பெயர் வந்ததாக கூறப்படுகிறது. இக்கூற்றை மறுத்து தென் தமிழகத்தில் உள்ள கன்னி ஆடு என்ற ஆட்டு இனத்தைப் போன்ற நிறத்தில் இருந்த இந்த நாய்களுக்கும், அதே பெயர் வழங்கப்பட்டது என்கின்றனர். கன்னி நாயை வளர்பவர்கள் பொதுவாக விற்பதிதில்லை, வீடுகளிலேயே வைத்துக்கொள்கின்றனர். ஆனால் அவற்றை நன்றாக பார்த்துக்கொள்ளதாக உறுதியளிப்பவர்களுக்கு அன்பளிப்பாக அளிப்பர். இந்த நாய்களை வளர்பவர்கள் இவற்றைத் தெருவில் சுற்ற அனுமதிப்பதில்லை, செல்லப்பிரானிகளாக மட்டுமே வளர்க்கின்றனர். இவற்றிற்கு காலை உணவாக பாலும், மதிய உணவாக சோளக் கஞ்சியும், மாலை உணவாக கேழ்வரகுக் கஞ்சியும் தரப்படுகிறது. இறைச்சி வாரத்திற்கு ஒரு முறையோ அல்லது மாதத்திற்கு ஒரு முறை மட்டுமே தரப்படுகிறது. இந்த இன நாய்கள் மிக அரிதானதான ஒன்றாக, அழிவின் விளிம்பில் உள்ளது.

Comments