உலகின் ஆபத்தான வேலை!

அந்தக் கிராமத்தின் பெரும்பாலான தொழிலாளர்களின் நாள் நள்ளிரவு 2 மணிக்கெல்லாம் தொடங்கி விடுகிறது. தொடர்ந்து 12 மணி நேரம் வேலைப் பார்த்தாலும் அவர்களுக்கான ஊதியம் வெறும் 10லிருந்து 12 டாலர்கள்தான். இந்தோனேஷியாவின் கிழக்கு ஜாவா பகுதியில் இருக்கும் அந்தக் கிராமம் மட்டுமல்ல; அதன் அருகில் இருக்கும் பல்வேறு கிராமத்தைச் சேர்ந்தவர்களுக்கும் இதே நிலைமைதான். உலகிலேயே மிகக் கடினமான வேலையைப் பார்க்கிறார்கள் இவர்கள் அத்தகைய கடினமான வேலை என்பது எரிமலைக்குள் இறங்கி கந்தகத் தாதுகளை (Sulphur Ore) வெட்டியெடுப்பது. எந்நேரத்திலும் வெடித்துச் சிதறலாம் எனும் நிலையில் புகைந்துகொண்டே இருக்கும் எரிமலையில் கந்தக தாதுகளை வெட்டியெடுப்பது இன்னும் பதைபதைக்க வைக்கிறது. இந்தோனேஷியா நாட்டின் மூலையில் அமைந்துள்ள ஜாவா தீவின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது கவா இஜென்(Kawah Ijen) எரிமலை. இந்த எரிமலையைச் சுற்றியுள்ள பகுதிகளின் மக்களில் பெரும்பாலோர் எரிமலைக்குள் கந்தகத்தை வெட்டியெடுக்கும் வேலையைத்தான் செய்கின்றனர். தினமும் நள்ளிரவு இரண்டு மணிக்கே எரிமலையின் மீது ஏறத் தொடங்கி விடுகின்றனர் கந்தக சுரங்கத் தொழிலாளர்கள். ஏறக்குறைய 6500 அடி உயர எரிமலையில் ஏறி அதன் முகப்புப் பகுதியை அடைந்து கீழே இறங்குகிறார்கள். தற்போதைய நிலையில் கவா இஜென் எரிமலை வெடிக்காமல் உறங்கிக் கொண்டிருந்தாலும் எந்நேரத்திலும் வெடிக்கலாம் என அதிர்ச்சியளிக்கின்றனர் எரிமலை ஆய்வாளர்கள். நள்ளிரவு இரண்டு மணிக்கு எரிமலை ஏறத் துவங்கும் தொழிலாளர்கள், உதவிக்கு ஒரு டார்ச்லைட் மட்டுமே வைத்திருக்கின்றனர். விடிய விடிய பனிப்புகை வழியை ஆக்கிரமிக்க ஆரம்பித்துவிடும். அதுமட்டுமில்லாமல் காற்றில் கலந்திருக்கும் எரிமலைத் துகள்களும், கந்தக தீப்பொறிகளும், எரிமலையின் புகையும் மூச்சு விடுவதில் சிரமத்தை ஏற்படுத்துகின்றன. உயரத்துக்குச் செல்லச் செல்ல இதன் செறிவும் அதிகரிக்க ஆரம்பித்து விடும். இதனைச் சமாளிக்கக் கூட முகத்தில் ஒரு சிறிய முகமூடியினை மட்டுமே அணிகின்றனர். அதனைத் தவிர பாதுகாப்புக் கருவிகள் எதுவும் அவர்களிடம் இல்லைஎரிமலையின் முகப்புப் பகுதியில் இறங்க இறங்கக் கந்தக கனிமத் தாதுவானது மழைப் போலக் கொட்டிக் கிடக்கிறது. தங்கத்தின் நிறத்தில் மின்னும் மஞ்சளில் உறைந்து கிடக்கின்றன. அதை உடைத்து நொறுக்கி பல பல துண்டுகளாக்கி தங்களது கூடைகளில் வைத்து கீழே இறங்குகின்றனர் சுரங்கத் தொழிலாளர்கள். இந்தக் கந்தக தாதுகள் எரிமலையின் முகப்புச் சரிவுகளில் பாறாங்கற்களைப் போலக் கொட்டிக் கிடக்கின்றன. அதை வெறுங்கையாலும் கிடைத்த இரும்புக் கம்பி, கட்டைகளால் பெயர்த்து எடுக்கின்றனர். இதை வெட்டியெடுக்கக் கூட ஒழுங்கான உபகரணங்களோ கையுறைகளோ அவர்களிடம் இல்லை. அதனை வழங்கவுமில்லை. இதனால் உடலில் பல்வேறு பாதிப்புகள் ஏற்படலாம் எனச் சொல்கின்றனர் ஆய்வாளர்கள். ஒருமுறை வெட்டியெடுக்கப்படும் கந்தகத் தாதுகளின் அளவானது சராசரியாக 175 பவுண்டுகள் வரை இருக்கும். அதை தங்களது தோள் கூடைகளில் ஏற்றிக்கொண்டு கீழே சென்று இறக்கிவிட்டு மீண்டும் மேலே ஏற்கின்றனர். இப்படி ஒரு நாளில் பலமுறை கீழேயும் மேலேயும் ஏறி உழைக்கின்றனர். ஒருகிலோ கந்தக தாதுவுக்கு 8 செண்ட் மட்டுமே கூலி. ஒருநாளைக்குச் சராசரியாக 12 டாலர்கள் வரை கூலியாகப் பெறுகின்றனர். ஆனால் சீனாவுக்கும், உலகின் மற்ற நாடுகளுக்கும் இந்தோனேஷியாவிலிருந்து இந்தக் கந்தகம் பெரியளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்த எரிமலையின் முகப்புக்குள் ஒரு மிகப்பெரிய ஆசிட் ஏரி (Crater Lake) உள்ளது. இது நீல ஏரி எனவும் அழைக்கப்படுகிறது. இந்த ஏரியில் இருக்கும் ஆசிட்டின் PH மதிப்பு 0.5. அதாவது நமது கார் பேட்டரிகளில் இருக்கும் ஆசிட் போன்றது. மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தாவிட்டாலும் தொடர்ச்சியாக உடலின் மேல் படுவதால் பாதிப்புகள் நிகழும். இந்த ஏரிக்கு அருகில்தான் பெரும்பாலான கந்தகத் தாதுகள் இருக்கின்றன. மேலும், பகல் நேரங்களில் இந்தப் பகுதியின் வெப்பநிலை சாதாரண வெப்பநிலையை விட அதிகமாக இருக்கிறது. இத்தகைய அபாயங்களைக் கொண்ட இஜென் எரிமலைச் சுரங்கமானது மிகப் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாகவும் இருந்துவருகிறது. எரிமலையின் முகப்புப் பகுதியில் கண்ணைக் கவரும் வகையில் தோன்றும் நீல நிற தீச்சுவாலைகளதான் சுற்றுலாவுக்கான முக்கிய காரணம். இதற்காகவே தினமும் 100 சுற்றுலாப் பயணிகள் இங்கு வருகின்றனர். செல்ஃபிக்காக மட்டும் பலரும் இங்கு வருகிறார்கள். பலர் ஏழ்மையைச் சுற்றுலாவாக்குவது நியாயம் இல்லை என்கின்றனர். இருளில்தான் இந்த தீச்சுவாலைகளைப் பார்க்க முடியும் என்பதால் அதிகாலை 3 மணிக்கெல்லாம் சுற்றுலாப் பயணிகளும் எரிமலை ஏறுகின்றனர். பல சுரங்கத் தொழிலாளிகள் தங்களது வேலையை விட்டுவிட்டு சுற்றுலா வழிகாட்டியாக மாறி வருகின்றனர். கடந்த மார்ச் 22-ல் எரிமலையிலிருந்து அதிகப்படியான செறிவில் தீப்பொறிகளும் எரிமலைத் துகள்களும் வெளியானதில் 30க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதனால் தற்காலிகமாக சுரங்கத்தையும் சுற்றுலாவையும் நிறுத்தி வைத்தனர். மறுபடியும் ஏப்ரல் இரண்டாம் வாரத்திலேயே எரிமலை மீண்டும் திறக்கப்பட்டது. ஏறக்குறைய 130 எரிமலைகள் வெடிக்கும் நிலையில் இருக்கும் நாடு இந்தோனேஷியா. எரிமலை வெடிப்பு என்பது சாதாரணமாக நிகழும் இந்தோனேஷியாவில் எரிமலைக்குள் இறங்கி வேலை செய்வதும் சாதாரணமாக இருக்கிறது. எரிமலை வெடிக்கிறதோ இல்லையோ அதனைத் தாண்டி வேலைப் பார்க்கும் தொழிலாளர்களுக்கு வேலையில் முறையான பாதுகாப்பு கூட இல்லை. கடந்த 40 வருடங்களில் 74 சுரங்கத் தொழிலாளர்கள் சல்பர் டை ஆக்ஸைடு, ஹைட்ரஜன் சல்பைடு போன்றவற்றின் தாக்கத்தால் இறந்துள்ளனர்.

Comments