இடுப்பு மனிதர் யு யா

பெரிய வளையத்தை இடுப் பில் வைத்துச் சுற்றுவதைப் பார்த்திருக்கிறோம். ஆனால் ஜப்பானைச் சேர்ந்த யுயா யமுடா, ராட்சத வளையத்தை இடுப்பால் சுற்றி கின்னஸ் சாதனை செய்துவிட்டார்! ‘இடுப்பு மனிதர் யு யா’ என்று செல்லமாக அழைக்கப்படும் இவர், வளையங்கள் மூலம் வித்தைகள் காட்டுவதில் வல்லவர். ஒரே நேரத்தில் தலை, கழுத்து, இடுப்பு போன்ற பகுதிகளில் ஏராளமான வளையங்களை வைத்து, சுற்றக் கூடியவர். சமீபத்தில் 16 அடி 10 அங்குல அகலமுள்ள வளையத்தை இடுப்பில் வைத்துச் சுற்றி சாதனை படைத்தார். இந்த வளையம் மூன்று பேர் தூக்கும் அளவுக்குப் பெரிதாக இருந்தது. அதை ஒரே ஆளாகச் சுற்றிக் காட்டியிருக்கிறார். இதுவரை இதுபோன்ற ஒரு சாதனை உலகத்தில் நடத்தப்பட்டதில்லை. ஏற்கெனவே 4.93 மீட்டர் அகலமுள்ள வளையத்தைச் சுற்றி உலக சாதனை படைத்தார். அஷ்ரிடா ஃபர்மன் என்பவர் அந்தச் சாதனையை முறியடித்தார். தற்போது மீண்டும் சாதனையைத் தன்வசப்படுத்திக்கொண்டார் இவர். “நான் ஏற்கெனவே செய்த சாதனைகள் முறியடிக்கப்பட்டுவிட்டதால், புதிய சாதனையை நிகழ்த்த வேண்டும் என்று பல மாதங்களாக முயற்சி செய்துகொண்டிருந்தேன். அந்த முயற்சிக்குப் பலன் கிடைத்துவிட்டது” என்கிறார் யுயா யமுடா.

Comments