டூர் என்றால் பஸ், ரயிலில் கிளம்பும் கூட்டம் குறைந்து கார்களில் பறக்கும் டிரெண்ட் இது. நினைத்த நேரத்தில் எந்த இடத்துக்கு வேண்டுமானாலும் செல்லலாம் என்பதுதான் கார்களில் பயணிப்பதன் பெரிய பலன். ஆனால், வெயில் காலத்தில் காரில் பயணிக்கும்போது சில விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக காரின் டயர்களில் கூடுதல் கவனம் தேவை!
நெடுஞ்சாலை விபத்துகளில் மிகமுக்கியக் காரணமாக இருப்பது டயர் வெடிப்புதான். எங்கே செல்லலாம், எங்கே தங்கலாம், என்னவெல்லாம் வாங்கலாம் என சுற்றுலாவுக்கு பிளான் போட நேரம் ஒதுக்கும் பலரும், கார் சரியான நிலையில் இருக்கிறதா என்று சோதித்துப் பார்ப்பதில்லை.
டயர் வெடிப்பு என்பது சாதாரணமான விஷயம் இல்லை. `நான் விலை உயர்ந்த கார் வைத்திருக்கிறேன். இந்த கார் டயர் எல்லாம் வெடிக்கவே வெடிக்காது' என்று யாரும் சொல்லவே முடியாது. லேண்ட்ரோவர் காரின் டயர்களே வெடித்து விபத்துக்குள்ளான செய்திகள் எல்லாம் உண்டு. அதனால் நானோவாக இருந்தாலும் சரி,பி.எம்.டபிள்யு-வாக இருந்தாலும் சரி கார் டயர்களில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
என்ன செய்யலாம்?
* வாரத்துக்கு ஒரு முறையாவது கார் டயரின் காற்றைப் பரிசோதிப்பது அவசியம். நெடுஞ்சாலைப் பயணத்துக்குக் கிளம்பும்போது நிச்சயம் கார் டயர்களில் காற்றின் அளவை செக் செய்யாமல் காரை எடுக்கக்கூடாது.
* காரை வெளியே எடுத்த 5 கிமீட்டருக்குள் காற்றை செக் செய்ய வேண்டும். டயர் ஏற்கெனவே ஹீட் ஆகி இருக்கும் என்பதால் அதன்பிறகு காற்று நிரப்புவது சரியாக இருக்காது.
* இப்போது விற்பனைக்கு வரும் பெரும்பாலான கார்களில் ட்யூப்லஸ் டயர்கள்தான். ட்யூப்லஸ் டயர்களில் பஞ்சராகி இருப்பதே தெரியாது. அதனால் வாரத்துக்கு ஒரு முறை டயரை செக் செய்யும்போதுதான் திடீரென ஒரு டயரில் காற்று மிகவும் குறைந்திருப்பதைக் கண்டுபிடிக்க முடியும்.
* ஒரு டயரின் ஆயுட்காலம் என்பது 30,000 & 40,000 கி.மீட்டர்தான். சர்வதேச நிறுவனம் தயாரித்திருக்கும் டயர் 50,000 கி.மீ வரை பயன்படுத்தலாம். ஒன்றும் ஆகாது என்றெல்லாம் எந்த டயரையும் நம்ப முடியாது. அதற்கு மேல் அந்த டயர் நன்றாகவே இருக்கிறது என்றாலும் சர்வீஸ் அட்வைஸர்களின் அறிவுரைப்படி மாற்றுவது நல்லது.
* எக்காரணம் கொண்டும் விலை குறைவாக இருக்கிறது என்கிற காரணத்துக்காக தரமற்ற டயர்களை வாங்கிப் பொருத்தாதீர்கள்.
* நெடுஞ்சாலைப் பயணத்தின்போது உங்களுக்கு ஓய்வுதேவையோ இல்லையோ காருக்கும், டயருக்கும் ஓய்வு தேவை. குறைந்தது 2 மணி நேரத்துக்கு ஒருமுறையாவது 10 நிமிடம் பிரேக் விடவேண்டியது அவசியம்.
* காரில் அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மேல் வெயிட்டை ஏற்றக்கூடாது. ஓவர் வெயிட் டயர்களுக்கு கூடுதல் சுமை.
* அழகுக்காக விலை மலிவான வீல் கேப்புகளை வாங்கிப் பொருத்த வேண்டாம். சில நேரங்களில் இந்த வீல்கேப்புகளே டயரின் ஓரத்தை தேய்த்துவிடும்.
* ஸ்பேர் வீலை மாற்றிவிட்டு உடனே பயணத்தைத் தொடரலாம் என நினைக்கூடாது. வீலின் மற்ற பாகங்களிலும் பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம்.
Comments
Post a Comment