நீங்கள் எதையும் கொண்டுவரவில்லை, அதனால் எதையும் எடுத்துச்செல்ல முடியாது

உலகம் முழுவதும் வித்தியாசமான கஃபேக்கள் இயங்கி வருகின்றன. இவற்றில் தாய்லாந்தைச் சேர்ந்த ‘கிட் மாய் டெத் கஃபே’ சற்று பயத்தையே ஏற்படுத்தி விடுகிறது. கஃபே முழுவதும் சவப்பெட்டி, அடர் வண்ண மலர்கள், ஒன்றிரண்டு எலும்புக்கூடுகள் என்று அலங்காரம் செய்யப்பட்டிருக்கிறது. சாப்பிடக்கூடிய பொருட்களுக்கு ‘முதுமை, வலி, நோய், மரணம்’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள். இங்குள்ள சவப்பெட்டியில் படுத்து, எலும்புக்கூடோடு அமர்ந்து படம் எடுத்துக்கொள்பவர்களுக்கு தள்ளுபடியும் உண்டு. ‘இன்று இரவு நீங்கள் உறங்கி மீண்டும் விழிக்கவே முடியாத நிலைக்கு செல்லத் தயாரா?’, ‘நீங்கள் எதையும் கொண்டுவரவில்லை, அதனால் எதையும் எடுத்துச்செல்ல முடியாது’, ‘நீங்கள் உயில் எழுத விரும்பினால், எழுதி வைத்துவிடுங்கள்’ போன்ற வாசகங்களும் வைக்கப்பட்டிருக்கின்றன. “உண்மையில் மரணம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கே இந்த கஃபேயை ஆரம்பித்திருக்கிறோம். இங்கே இருக்கும் பொருட்களை எல்லாம் பார்க்கும் போது மரணம் பற்றிய சிந்தனை வரும். உயிரோடு இருப்பது எவ்வளவு அற்புதமானது என்று தோன்றும். வாழும் நாட்களில் ஒவ்வொரு நொடியையும் மிகுந்த நம்பிக்கையோடும் மகிழ்ச்சியோடும் வாழத் தோன்றும். சவப்பெட்டியில் 3 நிமிடங்கள் படுத்திருந்தால் அவர்களுக்கு 40 ரூபாய் தள்ளுபடி தருகிறோம். ஆரம்பத்தில் எங்கள் கஃபேக்கு எதிர்பார்த்த ஆதரவு கிடைக்கவில்லை. இங்கே வந்து செல்கிறவர்களின் அனுபவம் வெளியே பரவி, இப்போது தைரியமாக வருகிறார்கள்” என்கிறார் கஃபேயின் நிறுவனர். இளைப்பாற வருகிறவர்களை இப்படி மிரட்டலாமா? பிரான்ஸைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் நிறுவனம் புதுமையான முறையில் வீடுகளை விற்கிறது. வாடிக்கையாளர்கள் வீட்டையும் குடியிருப்பையும் நன்கு புரிந்துகொள்ள விளையாட்டுகளை நடத்துகிறது. இதில் ‘எஸ்கேப் ரூம்’ என்ற விளையாட்டு எல்லோரையும் சுவாரசியப்படுத்தி விடுகிறது. “இந்த விளையாட்டுகள் மூலம் எங்கள் குடியிருப்பில் என்னென்ன வசதிகள் இருக்கின்றன என்பது தெரிந்துவிடும். வாடிக்கையாளர்களுக்கு எல்லாவற்றையும் அறிந்துகொண்ட திருப்தி கிடைக்கும். இளம் வயதினரே அதிகமாக வீடுகளை வாங்குகிறார்கள் என்பதால் இந்த விளையாட்டுக்கு ஆர்வத்துடன் ஒத்துழைக்கிறார்கள். ‘எஸ்கேப் ரூம்’ விளையாட்டில் பங்கேற்கும் வாடிக்கையாளர்களின் கண்களைக் கட்டிவிடுவோம். எங்கள் நிறுவனத்தைச் சேர்ந்த ஒருவர் அவர்களை வழிநடத்தியபடி வீட்டைப் பற்றிச் சொல்லிக்கொண்டே செல்வார். ஒரு அறைக்குள் நுழைந்தவுடன் விளக்கை அணைத்துவிட்டு, அவர்களை உள்ளே வைத்துவிட்டு வெளியேறிவிடுவார். பிறகு கண்களைத் திறக்கும்படி குரல் கொடுப்பார். அங்கே ஒளித்து வைக்கப்பட்டிருக்கும் சாவியைத் தேடி எடுத்து, கதவைத் திறந்துகொண்டு வெளியே வரவேண்டும். இதில் பங்கேற்பவர்களில் பலர் வீடுகளை வாங்கி விடு கிறார்கள்” என்கிறார் எஸ்கேப் ஹவுஸ் ரியல் எஸ்டேட் நிறுவனர்.

Comments